முதியோர்களில் மனச்சோர்வு
மனச்சோர்வு என்றவுடன் நம் மனதிற்கு வருவது – சோகமாக இருப்பது, முன்பு விரும்பி செய்யும் செயல்களிலும் இப்போது நாட்டமில்லாமல் இருப்பது, மிக இலகுவான காரியங்கள் செய்தாலும் எளிதில் சோர்வடைவது, எதிர்மறை எண்ணங்களால் அவதிப்படுவது, கவனம் செலுத்த இயலாமை, தூக்கமின்மை , பசியின்மை, குற்றவுணர்ச்சி, தன்னம்பிக்கையின்மை, எதிர்காலம் பற்றிய பயம், தற்கொலை எண்ணம் போன்றவை .இவை அனைத்தும் மனசோர்வின் அறிகுறிகள்.
முதியோர்களில் மனச்சோர்வின் அறிகுறிகள் :
முதியவர்களில் ஏற்படும் மனச்சோர்வு சற்றே மாறுபட்டது – சோகம் இல்லாமல் எரிச்சல , அதிக பசி, அதிக தூக்கம், உடல் பாரமாக உணர்வது போன்ற அறிகுறிகள் இருக்கலாம். மிகவும் தீவிரமான நிலையில் , அருகில் இல்லாத நபர்களில் குரல்கள் கேட்பது, இனம்புரியாத பயம் , உடல் அழுகுவதாக நம்புவது , தன்னையும் தன்னை சார்தவர்களுக்கும் கெடுதல் விளைவிக்க பலர் முயற்சி செய்வதாக எண்ணலாம்.
சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் :
மாறுபட்ட இந்த அறிகுறிகளும் , முதுமையையும் மனச்சோர்வையும் பிரித்துப்பார்க்கும் பயிற்சியின்மையாலும் , மனநல நிபுணரல்லாதவர்களால் எளிதில் மனச்சோர்வை கண்டறிவது கடினமாகிறது. பெரும்பான்மையானவர்கள் தகுந்த சமயத்தில் , தகுந்த மருத்துவத்தை பெறுவதில்லை .
மனச்சோர்வு – முழுமையான புரிதலும் சிகிச்சையும் :
மனச்சோர்வு மற்றுமல்லாமல் எல்லா மனநல பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள , ஒருவரின் உடற்கூறு , உளவியல் கட்டமைப்பு , சமூக சூழ்நிலை போன்றவற்றை ஆராய்வது அவசியமாகிறது.
மனச்சோர்வில் , உடற்கூறை சார்ந்த செரோடோனின் குறைபாடு முக்கிமான பங்கு வகிக்கிறது இதை மருந்துகள் கொண்டு சரி செய்யலாம் . மற்ற நோய்களுக்கான மருந்துகள் போல அல்லாமல் , மனச்சோர்வுக்கான மருந்துகளின் முழுமையான செயல்பாடு தெரிவதற்கு 3-4 வாரங்கள் வரை ஆகலாம். முதியவர்களில் வரும் மனச்சோர்வுக்கு ஊட்டச்சத்து குறைபாடு , தைரொய்ட் பிரச்னை, மூளை சிதைவு போன்ற காரணிகள் இருக்கலாம் . மறதி நோய் , சர்க்கரை வியாதி , ஹார்மோனல் பிரச்சனைகள், போதை பழக்கம், மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது . மனசோர்வுக்கான மருந்து அல்லது உளவியல் ஆலோசனை பெறுவதற்கு முன் மேற்கூறிய காரணிகளை கண்டறிந்து சரி செய்வது அவசியம்.
உளவியல் பிரச்சனைகளை களைவதற்கு முறையான பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்ற உளவியல் நிபுணரிடம் ஆலோசித்து அதற்கான பரிசோதனைகளையும் தீர்வையும் பெறலாம்.
தமிழ் சமூகம் ஆண்களை பலமானவர்களாகவும் , மனசோர்வை ஒரு பலவீனமாகவும் கருதுவதால், மனசோர்வை அனுபவிப்பவர்கள் தங்கள் வலியை பிறரிடம் உடனடியாக சொல்வதில்லை. காலம் மற்றும் வயது சார்ந்த சமூக மாற்றம் – பிள்ளகைகள் பிரிந்து தனியாக வாழ்வது , பெரியவர்களின் கருத்துக்கு இசையாமல் தணிச்சையாக முடிவெடுப்பது , வயது சார்ந்த இயலாமை , இடமாற்றம் , பணிமூப்பு சார்ந்த நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களிடம் இருந்து தொடர்பு துண்டிக்கப்படுவது போன்றவை மனசோர்வுக்கான சமூக காரணிகள் . இதை சரி செய்ய , தொலைபேசி மற்றும் சமூக நிகழ்வுகள் மூலம் தொடர்புகளை தக்கவைப்பது அவசியமாகிறது.
மேற்கூறிய அறிகுறிகள் உங்களிடம் அல்லது உங்கள் அருகாமையில் உள்ளவர்களிடம் தென்பட்டால், மனநலம் சார்த்த புரிதல் மற்றும் சிகிச்சை பெற மனநல நிபுணரை உடனே அணுகவும்.
முதுமையில் மனநலம் பேண எளிய வழிமுறைகள் :
உடல் நலம் பேணுவது , போதை பொருட்களை தவிர்ப்பது, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவற்றிற்கான மருந்துகளை தவறாமல் உட்கொள்வது , நண்பர்களுடன் தொடர்பை தக்கவைப்பது , சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது, மனநலம் சம்பந்தமான சந்தேகங்களை உடனடியாக நிபுணரிடம் ஆலோசித்து தெரிந்து கொள்வது மற்றும் அதற்கான தகுந்த சிகிச்சை பெறுவதன் மூலம் மனநலத்தை பேணலாம்